இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், முதலில் தொடங்க இருக்கும் ஒரு நாள் போட்டிக்காக அகமதாபாத்திற்கு இந்திய அணி இன்று சென்றது. அங்கு சென்ற பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மூன்று இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஷிகார் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் யார் யார் இவர்களுக்கு மாற்று வீரர்களாக களமிறங்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்தத் தொடருக்கு ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்ட ஷாரூக் கான், சாய் கிஷோர் மற்றும் ரிஷி தவான் ஆகிய மூன்று பேரில் இருவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன், தீபக் ஹூடா மற்றும் பிரசித் கிருஷ்ண களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஷிகர் தவானிற்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. அதேபோல் நடுகள வரிசையில் தீபக் ஹூடா ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அணியில் களமிறங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை என்பதால் இந்திய அணியின் பேட்டிங் சற்று பலவீனமாக அமைந்துள்ளது.
ஒருநாள் அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ், ஒரு நாள் அணி விவரம்:
பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், போனர், டேரன் ப்ராவோ, ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹோப், ஹெசெயின், ஜோசஃப், பிராண்டன் கிங், பூரன், கீமர் ரோச், செஃபெர்ட், ஸ்மித், வல்ஷ் ஜூனியர்.
மேலும் படிக்க:“உன் கோவத்தை கோலியிடம் காட்டு...” அட்வைஸ் பண்ண வெட்டோரி; நினைவு கூறும் சாஹல்