ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபிக்காக விளையாடியபோது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல்.


2014 ஆம் ஆண்டிற்கு முன்புவரை சாஹல் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் (RCB) அணிக்காக விளையாடினார். 113 போட்டிகளில் 138 விக்கெட்டுகள் எடுத்தவர் என்பதால் அந்த அணியின் கீ ப்ளேயர்களில் அவரும் ஒருவர். அணியின் கேப்டன் விராட் கோலி.


விராட் கோலி மைதானத்தில் ரொம்பவே விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் அணியினரிடம் வேலை வாங்குவதில் கடுமையாகவும் நடந்து கொள்வாராம். கவரஸ் பகுதியில் நின்று கொண்ட அவர் இடும் கட்டளைகளைக் கேட்டு காண்டாகும் சாஹல் விக்கெட் எடுத்துவிட்டால் மொத்த கோபத்தையும் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் நொந்து போகும்படி சமிக்ஞைகளில், சில நேரம் வெறுப்பேற்றும் வார்த்தைகளாலும் கொட்டித் தீர்த்து விடுவாராம். அடுத்தடுத்த போட்டிகளில் இது அதிகரிக்க மேட்ச் ரெஃப்ரீ இதனை ஆர்சிபி கோச் டேனியல் வெட்டோரியிடம் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.


இதைப் பற்றி ரவி அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் சாஹல், "நான் ஆர்சிபியில் 2014ல் சேர்ந்தேன். நான் ரொம்பவே படபடப்பாக இருந்தேன். கோலி கவர்ஸ் பகுதியில் இருப்பார். ரொம்பவே உற்சாகமாக இருப்பார். நான் அணியிலேயே மிகச் சிறியவன். மேட்ச்சில் தவறு நடக்கும்போது சட்டென்று கோபம் காட்டுவார். என்னிடமும் காட்டுவார். அதனால் அப்போதெல்லாம் விக்கெட் எடுத்தால் எனது ஆவேசத்தை நான் பேட்ஸ்மேனிடம் திரும்பிக் காட்டுவேன். இதை ரெஃப்ரீ கவனித்து பயிற்சியாளர் வெட்டோரியிடம் சொல்லிவிட்டார்.


ஒருமுறை வெட்டோரியே என்னிடம் வந்து பேசினார். என்னிடம் அவர் சொன்னது நகைப்பை ஏற்படுத்தியது. நீ விக்கெட் எடுத்ததைக் கொண்டாட நினைத்தால் கோலியிடம் திரும்பி கொண்டாடு. அவரிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். பேட்ஸ்மேனை வெறுப்பேற்றாதே" என்றார்.


ஆனால் நான் என் பழக்கத்தை மாற்றவில்லை. ஒரு முறை எல்லை மீறி வார்த்தைகளையும் விட்டுவிட்டேன். மீண்டும் வெட்டோரிக்கு புகார் போக. என்னிடம் வந்த அவர், "இது உனக்கு நல்லதல்ல. நீ திறமைசாலி. வளர வேண்டும். அப்படியானால் இதை விடு. திரும்பவும் சொல்கிறேன் வெற்றிக் கொண்டாட்டத்தை கோலியிடம் காட்டு. அவரிடம் என்ன வேண்டுமானாலும் சொல். அவர் கண்டு கொள்ள மாட்டார்" என்றார். இவ்வாறாக ஆர்சிபியில் கோலி, வெட்டோரியுடனான நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல். 


ஆர்சிபி அணிக்காக வரவிருக்கும் போட்டியில் சாஹல் விளையாடுவாரா எனத் தெரியாது. ஐபிஎல் ஏலம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதில் சாஹல் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சாஹல் ஆர்சிபி கிடைப்பாரா இல்லை அதிக ஏலம் தரும் அணிக்குப் போவாரா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.