ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 7 முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை ஐந்து நாள் டெஸ்ட் போட்டியாக நடைபெறும். ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மற்றொரு சீசன் பெரும் ஆரவாரத்துடன் முடிந்த அடுத்த வாரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் திரும்பியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வரையிலான தரவரிசையில் ஆஸ்திரேலியா 66.67 சதவீதம் மற்றும் 152 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் இந்தியா 58.8 சதவீதம் மற்றும் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
டியூக்ஸ் பந்து
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு இரு அணிகளுக்கும் கூடுதல் சவாலைச் சேர்க்கிறது, ஏனென்றால் சாதாரண கூகபுரா பந்தைப் போலல்லாமல், இது மெஷினை தவிர்த்து கைகளால் தைக்கப்படுகிறது. அதனால் பந்து மேலும் அதிகம் ஸ்விங் ஆகிறது. சுவிங்கிற்கு பெயர்பெற்ற இந்த பந்தில் ரன் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சிரமமான காரியமாக இருக்கும்.
பழிதீர்க்குமா இந்தியா?
2021 ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கிய இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறையும் இறுதிப்போட்டிக்கு வந்த ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. அந்த போட்டி ஒரு லோ ஸ்கோரிங் போட்டியாக அமைந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் மிகவும் எளிதாக நியூசிலாந்து அணி இந்தியாவை வென்றது.
முதல் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து கோப்பையை தட்டி சென்றது. அதன் பின் இந்தியாவுக்கு தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த முறை செய்த தவறை இம்முறை இந்தியா செய்யாது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த முறை விட்டதை இம்முறை பிடிக்க இந்திய அணியும் உறுதியுடன் உள்ளது.
போட்டியை எங்கு காணலாம்?
இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கும். கிரிக்கெட் ரசிகர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக பார்க்கலாம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் போட்டியை நேரடியாக காணலாம்.
WTC 2023 இறுதிப்போட்டி அணிகள்
WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (WK)
காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (WK), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (WK), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டோட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித் (VC), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்
காத்திருப்பு வீரர்கள்: மிட்ச் மார்ஷ், மேத்யூ ரென்ஷா