ஐபிஎல் தொடரில் ஜோஷ் ஹேசில்வுட், விராட் கோஹ்லியுடன் கடந்த ஒன்றரை மாதங்களாக ஆர்சிபி அணியில் ஆடுவதால், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் முக்கிய வீரரான கோலியின் சமீபத்திய வெற்றியின் பின்னணியில் இருப்பது என்ன என்று அருகில் இருந்து பார்த்து கூர்ந்து கவனித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


பெங்களூரு அணியில் இருந்த காலம்


ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் (ஆர்சிபி) கோஹ்லியுடன் தனது இரண்டு வருடம் ஆடியதன் மூலம், இந்திய அணியின் மேஸ்ட்ரோ கோலி ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தொடர்ந்து கருதப்படுகிறார் என்பதை நேரில் பார்த்ததாக கூறுகிறார். இரண்டு ஆண்டுகளாக உன்னிப்பாக அவரது ஆட்ட அணுகுமுறை மற்றும் நுணுக்கங்களை கவனித்துள்ள ஹேசில்வுட், ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்டால், கோஹ்லியை வெளியேற்றி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் உறுதியாக இருப்பார் என்று தெரிகிறது.



ஏன் கோலி வெற்றி பெறுகிறார்?


ஹேசில்வுட்டின் கூற்றுப்படி, கோஹ்லியின் அசைக்க முடியாத பணி நெறிமுறை மற்றும் ஈடுபாடு அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலரும் வீழ்த்த விரும்பும் விக்கெட்டுகளில் ஒருவராக இருக்க அவருக்கு உதவுகிறது. "அவர் அவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதுவே தனித்து நிற்கிறது. முதலில், அவரது உடற்தகுதி - பின்னர் திறமை, பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் அவரது அர்ப்பணிப்பு, இவைதான் அவரது மூலதனம்," என்று ஹேசில்வுட் ஐசிசியுடன் பகிர்ந்து கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்: CSK: தி.நகர் திருப்பதி கோயிலில் ஐ.பி.எல். கோப்பையுடன் சி.எஸ்.கே நிர்வாக குழு சிறப்பு பூஜை!


கோலியின் அர்ப்பணிப்பு


மேலும் பேசிய அவர், "அவர் எப்பொழுதுமே பயிற்சிக்கு முதல் ஆளாக வெளியே வருவார். அதே போல கடைசியாகத்தான் உள்ளே செல்வார். இவ்வளவு உயர் மட்டத்தில் உள்ள அவர் பயிற்சியில் இவ்வளவு தீவிரம் காட்டுவது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் செயல்திறனையும் உயர்த்துகிறது. இது முழு அணியையும் மேம்படுத்த உதவுகிறது," என்றார். ஆர்சிபியில் இருந்த காலத்தில் ஹேசில்வுட்டின் கவனத்தை ஈர்த்த வீரராக WTC அணியின் கோலி மட்டும் இல்லை, இன்னொரு சக வீரர், முகமது சிராஜும் உள்ளார். சிராஜின் சிறப்பான ஆட்டத்தை மேற்கோள் காட்டி, சிவப்பு பந்தில் சிராஜின் திறமைகளை ஹேசில்வுட் வெகுவாக பாராட்டினார்.



சிராஜ் குறித்து ஹேசில்வுட் 


சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் சீசனில் RCB க்காக முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேசில்வுட் தொடரை முழுதாக ஆடவில்லை, பாதியில் தான் வந்தார் என்றாலும், அவர் சிராஜின் பந்துவீச்சை நன்றாக கவனித்துள்ளார். "இந்த ஆண்டு நான் RCB அணிக்கு வந்து இணையும் முன்பு, முன்பு அவர் தீயாக இருந்தார். ஹோம் மைதானமான சின்னசாமியில் பந்துவீசுவதில் சவால்கள் இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, சிறப்பான எகனாமி விகிதத்தில் பந்து வீசி வந்தார். அவரது கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த பந்துவீச்சு திறமை மிகவும் குறிப்பிடத்தக்கது," என்று பேசினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கோஹ்லியின் பணி நெறிமுறைகள் குறித்த ஹேசில்வுட்டின் கவனிப்பு மற்றும் சிராஜின் திறமைக்கான அவரது பாராட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க அவர் என்னென்ன யுக்திகளை கையாளப் போகிறார் என்பது பார்க்க சுவாரஸ்யமாகவும், ஃப்ரான்ச்சைஸ் கிரிக்கெட்டின் மேஜிக்காகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.