ஹர்திக்கின் வெற்றிகரமான கேப்டன்சியின் ரகசியம் என்ன என்று நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு தெரிவித்தார்.
இந்திய அணி அபார வெற்றி
நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. டி20யில் தனது முதல் சதத்துடன் அணிக்கு முக்கியப் பங்காற்றிய தொடக்க வீரர் சுப்மான் கில், நேற்று ஆட்டம் முடிந்த பின்பு பேசுகையில் இதற்காக கூடுதலாக எதையும் செய்யவில்லை என்று கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து விளையாட, கில் 126 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இமாலய ஸ்கோரை துரத்தும் பணியில் மொத்தமாக சரிந்த நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த பெரிய வெற்றி மூலம் இந்திய அணி பல சாதனைகளை உடைத்துள்ளது. குறிப்பாக டெஸ்ட் ஆடும் அணிகளுக்கு எதிராக அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.
ஆட்டம் குறித்து கில்
"நீங்கள் பயிற்சி செய்யும் போது அது நன்றாக இருக்கிறது, அது பலனளிக்கிறது. அணிக்கு வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. சிக்ஸர் அடிக்க ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு டெக்னிக் உள்ளது," என்று போட்டிக்கு பிறகு விளக்கக்காட்சியில் கில் கூறினார். "ஹர்திக் பாய் நான் செய்யும் வழியில் பேட்டிங் செய்யச் சொன்னார், மேலும் எதுவும் புதிதாக செய்ய வேண்டிய அவசியமில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும்போது, எந்த வித சோர்வும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, மேலும் மூன்று வடிவங்களிலும் விளையாடுவதில் பெரும் மகிழ்ச்சிதான்", என்றார்.
ஹர்திக்கின் ஒரே விதி…
கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், பொதுவாக களத்தில் முடிவுகளை எடுக்கும்போது தைரியமாகத்தான் செயல்படுவேன் என்றார், "நான் எப்போதுமே இதுபோன்ற விளையாட்டையே விளையாடி வருகிறேன், அந்த நேரத்தில் நிலைமையை மாற்ற என்ன தேவை என்பதை அறிய முயற்சிப்பேன், முன்கூட்டிய யோசனைகள் எதுவும் இல்லை. பொதுவாக நான் என் தைரியத்தை ஆதரிக்கிறேன்.
எனது வாழ்க்கைக்கும் கேப்டன்சிக்கும் ஒரே ஒரு மிகவும் எளிமையான விதி வைத்துள்ளேன் - நான் கீழே சென்றால், எனது முடிவுகளில் கீழே இறங்கிவருவேன். நான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியபோது, இரண்டாவது இன்னிங்ஸ் கடினமானதாக உணர்ந்தேன். இதுபோன்ற ப்ரஷரான சூழ்நிலைகளை நாங்கள் இயல்பாக மாற்ற விரும்புகிறோம், அதன்மூலம் பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்"' என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டார்.
இந்தியாவை பாராட்டிய சான்டனர்
தோல்வியடைந்த நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர், "சிறந்த" கிரிக்கெட்டை விளையாடியதற்காக இந்தியாவை பாராட்டினார். "அவர்கள் அணியில் சிலர் தற்போது சிறந்த நிலையில் உள்ளனர். பவர்பிளேயில் ஐந்து விக்கெட்டுகளை இழக்கும்போது வெற்றி பெறுவது மிகவும் கடினம். பந்து ஸ்விங் ஆகும்போது சவாலாக இருக்கும். இந்தியா விளையாடிய விதத்தை நீங்கள் பார்த்தால் தெரியும். அவர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு மெதுவாக ஆடினர், பிறகு ஸ்விங் குறைந்த பின்புதான் வேகம் எடுத்தார்கள்," என்று சான்ட்னர் கூறினார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையைப் பற்றி கேட்டதற்கு, சான்ட்னர், "அந்த மாதங்களில் சில நேரங்களில் பனி இருக்கும் என்று நான் நினைக்கிறேன், பெரும்பாலான அணிகள் முதலில் பந்து வீச விரும்புவார்கள். சில சிறந்த பிட்ச்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், அக்டோபரில் அது நடந்தால், அது ஒரு சிறந்த உலகக் கோப்பையாக இருக்கும். அதில் பங்கேற்கவும் கற்றுக்கொள்ளவும் ஆர்வமுடம் இருக்கிறோம். நல்ல பிட்சில் 320 என்பது எதிரணிகளை நாங்கள் கட்டுப்படுத்த விரும்பும் ஸ்கோராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்", என்றார்.