நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 


3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 


இதனிடையே டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.


பட்டாசாய் வெடித்த இந்திய அணி 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த முறையும் சொதப்பினார். 1 ரன்னில் அவர் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ராகுல் திரிபாதி உள்ளே வந்தார். 


மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்து வீச்சை விளாசி தள்ளினார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில் - ராகுல் திரிபாதி இருவரும் நியூசிலாந்து விழிபிதுங்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடினர். ஸ்கோர் 87 ஆக உயர்ந்த போது 44 ரன்களில் ராகுல் திரிபாதி வெளியேறினார். ஆனாலும் சுப்மன் கில்லின் அதிரடி மட்டும் நிற்கவேயில்லை. 3 விக்கெட்டுக்கு களம் கண்ட சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


அசூர ஆட்டம் ஆடிய சுப்மன் கில் பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் சதமடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 30  ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், பிளைர் திக்னெர், சௌதி தலா, டேர்ல் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து


இதனைத் தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட நியூசிலாந்து ஆரம்பம் முதலே ஆட்டம் கண்டது. அந்த அணியின் ஃபின் ஆலன் 3 ரன்களிலும், டெவன் கான்வே 1 ரன்னிலும், மார்க் சேப்மேன் ரன் ஏதுவும் எடுக்காமலும், கிளென் பிலிப்ஸ் 2 ரன்களிலும், மிட்செல் பிரேஸ்வெல் 8 ரன்களிலும், மிட்செல் சாண்ட்னர் 13 ரன்களிலும், சௌதி, லோகி பெர்குசன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர்.


மறுபுறம் ஒற்றை ஆளாக கௌரமான இலக்கை அடைய டெய்ரி மிட்செல் மட்டும் போராடினார். இறுதியாக நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதிவரை போராடிய மிட்செல் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.