அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டலுக்கான எஃப்.பி.ஓ. முறையில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ மூலம், அந்த குழுமத்தின் தலைவர் கவுதாம் அதானி விளக்கமளித்துள்ளார்.


முதலீட்டாளர்களே முக்கியம்:


அதில், ”இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை  எனது முதலீட்டாளர்களின்  நலனே முதன்மையானது. மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். பங்கு விற்பனை ரத்து முடிவு  நிறுவனத்தின் எதிர்கால  திட்டங்களில்  எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்கு விற்பனையை சரியான நேரத்தில்  மீண்டும் செயல்படுத்துவோம். பங்குச்சந்தைகளில்  காணப்பட்ட ஏற்ற இறக்கத்தால், எஃப்.பி.ஓ.வை தொடர்வது  சரியானது அல்ல என முடிவெடுத்தோம்” என விளக்கமளித்துள்ளார்.



நம்பிக்கை தான் காரணம்:


தொடர்ந்து, ”ஒரு தொழிலதிபராக 4 தசாப்தங்களுக்கும் மேலான எனது தாழ்மையான பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும், குறிப்பாக முதலீட்டாளர் சமூகத்தின் அமோக ஆதரவைப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். வாழ்க்கையில் நான் எதையாவது சாதித்திருந்தாலும், அது நம்பிக்கையால்தான் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்” எனவும் அதானி தெரிவித்துள்ளார்.


ரூ.20,000 கோடி நிதி திரட்டும் முடிவு வாபஸ்


அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனம் திரட்டும் நோக்கில், எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் காரணமாக, அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.


இதன் காரணமாக, எதிர்பார்த்ததை காட்டிலும் மந்தமாகவே அந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனையாகின.  எஃப்.பி.ஓ முறையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் ரூ.3,112 விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பங்குச்சந்தையில் அதன் விலை ரூ.2000 அளவிற்கு சரிந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் கோடி மூலதனத்தை திரட்டும் நோக்கிலான, எஃப்.பி.ஓ பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாகவும், ஏற்கனவே அந்த பங்குகளை வாங்குவதற்கான பணத்தை செலுத்தியவர்களுக்கு, அவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக பணக்காரர்கள் பட்டியலில் சரிவு:


இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.