ரஞ்சி கோப்பை:


இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின


இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டு கேவையில் உள்ள SNR College Cricket Ground - ல் விளையாடியது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் மற்றும் கெவின் ஜிவ்ரஜனி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில், டக் அவுட் முறையில் கெவின் ஜிவ்ரஜனி வெளியேறினார். பின்னர் ஷெல்டன் ஜாக்சன் களம் இறங்கினார்கள். ஹர்விக் தேசாய் மற்றும் ஜாக்சன் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இதில், 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சேதேஷ்வர் புஜாரா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 77.1 ஓவர்கள் முடிவில் சவுராஷ்ட்ரா அணி 183 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ் நாடு அணி தரப்பில் கேப்டன் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.


அதிரடியாக விளையாடிய தமிழக அணி:


இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. அதன்படி, தமிழக வீரர்  விஜய் சங்கர் 14 ரன்கள் மற்றும் முகமது அலி 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 25 ஆம் தேதி மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. 


இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. அந்தவகையில் தமிழக் அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.


அரையிறுதிக்கு முன்னேற்றம்:


அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  களம் கண்ட ஹார்விக் தேசாய் 4 ரன்களுடனும், கெவின் ஜிவ்ரஜனி 27 ரன்களுடனும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஷெல்டன் ஜாக்சன் 2 ரன்னிலும், புஜாரா 46 ரன்னிலும், அர்பித் வஸவதா 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.  தொடர்ந்து களம் இறங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.