டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது. அதில் துபாயில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினர். எனினும் கேப்டன் விராட் கோலி மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். 


இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.  இந்நிலையில் இன்றைய போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் அதிக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  இந்தச் சூழலில் இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் யார் யார்?


 


5. தில்ஷன் (6):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷன் ஒரு அதிரடி ஆட்டக்காரர். இவர் 34 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  


 


4.ரோகித் சர்மா(6):




இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. சமீப காலங்களில் இந்திய அணிக்கு அதிரடி தொடக்கம் அளிப்பதில் இவர் முக்கியமான பங்கு வகித்து வருகிறார். இவர் 25 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


 


3. மகேலா ஜெயவர்தனே (7):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


2. கிறிஸ் கெயில்(9):




டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


 


1. விராட் கோலி:(10)




இந்தப் பட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவரும் கிறிஸ் கெயிலும் 9 அரைசதங்கள் அடித்திருந்தாலும் விராட் கோலி தற்போது வரை 16 இன்னிங்ஸில் அந்த 9 அரைசதங்களை அடித்துள்ளார். அத்துடன் தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் பல அணிகளை விராட் கோலி திணறடித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 57 ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார். அதாவது 17ஆவது டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் அவர் தன்னுடைய 10ஆவது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். 


மேலும் படிக்க: மைதானத்தில் இந்திய அணி செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?