டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியின் குரூப் 1 பிரிவில் இலங்கை, வங்காளதேசம் ஷார்ஜா மைதானத்தில் சற்றுமுன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிலங் செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய லிட்டன்தாஸ் மற்றும் முகமது நைம் அதிரடியாகவும், நிதானமாகவும் ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்களை எடுத்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய அனுபவம் மிகுந்த ஷகிப் அல்ஹசன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்து கருணரத்னே பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முஸ்தபிர் ரஹிம் மற்றும் முகமது நைம் ஜோடி விறுவிறுவென்று ரன்களை குவிக்கத் தொடங்கினர். குறிப்பாக முஸ்தபிர் ரஹிம் அதிரடியாகவே ஆடினர். முகமது நைம் அரைசதம் அடித்த பிறகு 52 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆனாலும், மறுமுனையில் முஸ்தபிர் ரஹீம் தொடர்ந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
வங்காளதேச அணி தங்களது அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. முஸ்தபிர் ரஹீம் 37 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
முற்றிலும் அனுபவ வீரர்களாக களமிறங்கியுள்ள இலங்கை அணி இந்த இமாலய இலக்கை எப்படி எட்டிப்பிடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த அணியின் அனுபவம் மிகுந்த வீரரான குசல் பெராரா முதல் ஓவரிலே நசூம் அகமது பந்தின் சுழலில் போல்டாகி வெளியேறினார். இதனால், இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சியானது.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த நிசாங்காவும், அசலங்காவும் அதிரடியாகவே ஆடினர். நிசங்கா 21 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷகிப் அல்ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அவிஷ்கா பெர்னாண்டோவும் போல்டானார். ஷகிப் அல் ஹசன் ஒரே ஓவரில் இரண்டு பேரை ஆட்டமிழக்கச் சய்தார். அடுத்து வந்த ஹசரங்காவும் 6 ரன்களில் வெளியேறினார். 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை கடுமையான நெருக்கடிக்கு ஆளானது. அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்சே எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக ஆடினார்.
மறுமுனையில் நிலைத்து நின்ற அசலாங்காவும் அதிரடியை காட்டிக்கொண்டே இருந்தார். இருவரும் இணைந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். வங்கதேச கேப்டன் மஹமுதுல்லா மாற்றி, மாற்றி வியூகங்களை வகுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. பிறந்தநாள் நாயகனாக 31 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் 165 ரன்களை எட்டியபோது நசூம் அகமது பந்தில் போல்டானார். 18.5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி வங்கதேசம் நிர்ணயித்த 172 ரன்களை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சைபூதின் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரிவழங்கினார்.
மிகவும் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அனுபவம் மிகுந்த வங்கதேசம் நிர்ணயித்த 172 ரன்களை எட்டிப்பிடித்ததற்கு அந்த நாட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்