உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணி துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.




அதிரடி தொடக்க வீரர் ரோகித் சர்மா ஷாகின்ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரிலே எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். இதனால். இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்கு முன்பு மற்றொரு அதிரடி வீரர் கே.எல்.ராகுலும் ஷாகின்ஷா வீசிய மூன்றாவது ஓவரில் போல்டானார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இந்தியா இழந்ததால் இந்திய அணிக்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.


நம்பிக்கை அளிக்கும் விதமாக விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன்களில் ஹசன் அலி பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.




இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய அணியை விராட்கோலியும், ரிஷப்பண்டும் சரிவில் இருந்து மீட்டனர். இதனால், இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப்பண்ட் ஹசன் அலி வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதே ஓவரில் விராட்கோலி-ரிஷப்பண்ட் பார்ட்னர்ஷிப் 38 பந்தில் 50 ரன்களையும் எட்டியது.


அதிரடியை தொடர முயற்சித்த ரிஷப்பண்ட் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப்கான் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜடேஜாவும், விராட்கோலியும் நிதானமான ஆட்டத்தை சிறிது நேரம் காட்டினர். இதனால், 15 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.




இதையடுத்து, கடைசி 5 ஓவர்களில் ஜடேஜாவும், விராட்கோலியும் அதிரடி ஆட்டத்திற்கு மாறினர். 18வது ஓவரில் மட்டும் இந்தியா 13 ரன்களை எடுத்தது. நெருக்கடியான நேரத்தில் பொறுப்புடன் ஆடிய விராட்கோலி 45 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களை அடித்தார். ஜடேஜா 12 பந்தில் 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹசன் அலி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  சிறப்பாக ஆடிய விராட்கோலி 19வது ஓவரில் 49 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அந்த ஓவரில் இந்திய அணிக்கு ஓவர்த்ரோவில் ஒரு பவுண்டரி உள்பட 3 பவுண்டரி கிடைத்தது.


ஹரிஷ் ராப் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக்பாண்ட்யா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இந்தியா 8 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண