இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். இவர் இன்று தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளில் இவர் கடந்த வந்த பாதை என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்..


 


சூர்யகுமார் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவர். இவர் மும்பை அணிக்காக 2010ஆம் ஆண்டு முதல் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று வந்தார். 2012ஆம் ஆண்டு இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டார். எனினும் அந்தத் தொடரில் இவர் ஒரே போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அப்போது முதல் 3 ஆண்டுகள் கொல்கத்தா ஐபிஎல் அணியில் இவர் விளையாடினார். 


 






2018ஆம் ஆண்டு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 4வது மற்றும் 5வது முறை கோப்பையை வெல்ல சூர்யகுமார் யாதவ் முக்கியமான காரணமாக அமைந்தார். குறிப்பாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் அசத்தினார். இதன்காரணமாக 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 


 


அதில் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுக போட்டியில் முதல் பந்தில் சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து சூர்யகுமார் யாதவ் அசத்தினார். டி20யில் அசத்தியதன் மூலம் ஒருநாள் போட்டியிலும் இவர் களமிறங்கினார். 


 




ஒருநாள் போட்டிகளைவிட டி20 போட்டிகளில் இவர் சிறப்பாக அசத்தினார். இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் இவர் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். அத்துடன் டி20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிய கோப்பை தொடரிலும் இவர் அரைசதம் விளாசி அசத்தினார். இந்திய கிரிக்கெட் அணியில் SKY என்று அழைக்கப்படுவார். இவர் இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி வீரராக வலம் வருகிறார். வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 28 டி20 போட்டிகளிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் 28 டி20 போட்டிகளில் 811 ரன்களும், 13 ஒருநாள் போட்டிகளில் 340 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:கிரிக்கெட் களத்தை போல் ட்விட்டர் களத்திலும் நாயகன் கோலியின் புதிய சாதனை...