கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது. 


 இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஆஸ்தான வீரரான ஜானி பார்ஸ்டோ காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து இவருக்கு பதிலாக அலெக்ஸ் ஹெலக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். 


காயத்திலிருந்து குணமடைய ஜானி பேர்ஸ்டோவ் தனது லோயர்-லிம்ப் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 






முன்னதாக, ஜானி பார்ஸ்டோ நேற்று லீட்சில் கோல்ப்  ஆடியபோது, அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. இதனால், அவரது கீழ் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, ஜானி பார்ஸ்டோ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் உலககோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். 


இங்கிலாந்து அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ஜானி பார்ஸ்டோ 66 டி20 போட்டிகளில் ஆடி 1,337 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 8 அரைசதங்கள் அடங்கும். 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11 சதங்கள், 15 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 634 ரன்கள் விளாசியுள்ளார். 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 482 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 12 சதங்களும், 23 அரைசதங்களும் அடங்கும்.






டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம் : 


ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, சாம் கர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்


காத்திருப்பு வீரர்கள் : 


லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டைமல் மில்ஸ்