இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆசிய கோப்பை தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் 1020 நாட்களுக்கு பிறகு முதல் சதம் விளாசி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினார். அத்துடன் ஆசிய கோப்பை தொடரில் 274 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். 


இந்நிலையில் கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதன்படி ட்விட்டர் தளத்தில் விராட் கோலியை தற்போது 50 மில்லியன்(5 கோடி) பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன்மூலம் ட்விட்டர் தளத்தில் 50 மில்லியன் நபர்கள் பின் தொடரும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 


 






ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகமாக பின் தொடரப்படும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் விராட் கோலியை 211 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் விராட் கோலியை சுமார் 49 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன்மூலம் மொத்தமாக விராட் கோலியை 310 மில்லியன் பேர் சமூக வலைதளங்களின் மூலம் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோவர்களுக்கு மேல் கொண்ட மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 


 






இன்ஸ்டாகிராமில் 200 மில்லியனுக்கு மேல் ஃபாலோவர்கள் கொண்ட வீரர்கள்:


கிறிஸ்டியானா ரொனால்டோ- 451 மில்லியன்


லியோனல் மெஸ்ஸி-334 மில்லியன்


விராட் கோலி- 211 மில்லியன் 


கால்பந்து ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தப் படியாக விராட் கோலி இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இணைந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.