இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


நியூசிலாந்து சுற்றுப்பயணம் 


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது. 






அதற்கு காரணம், இந்திய அணியின் பந்துவீச்சு பிற்பாதியில் சுத்தமாக எடுபடாமல் போனது தான். முதல் பாதியில் இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 110 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் பிரேஸ்வெல் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க போராடினார். சதமடித்து அசத்திய அவர், இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தோல்வி பயத்தை உண்டாக்கினார். 


இன்று 2வது போட்டி 


இந்நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகர் ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி, தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும்  தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். 


இரு அணிகளும் எப்படி? 


இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் முதல் போட்டியில் ஜொலிக்கவில்லை. குறிப்பாக மிடில் வரிசை இந்திய அணிக்கு சற்று பலவீனமாகவே உள்ளது. பந்துவீச்சிலும் கடைசி கட்டத்தில் சொதப்புவது எதிரணிகளுக்கு பலமாக மாறுகிறது. இவற்றையெல்லாம் இந்த போட்டியில் இந்திய அணி சரி செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 


அதேசமயம்  நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் முதல் போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. நியூசிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. இன்றைய போட்டியில் அதனை மாற்றி காட்டுவதற்கான வாய்ப்பில் நியூசிலாந்து மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி பரபரப்பு பஞ்சமிருக்காது என்பது நிச்சயம். 


முதல் போட்டி 


ராய்ப்பூர் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறையாகும். அதனால் அங்கிருக்கும் சுமார் 60 ஆயிரம் இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.  ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 114 முறை மோதியுள்ளது.இதில் 56 முறை இந்தியாவும், 50 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 7 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.