பெங்களூரு மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வருத்தம் தெரிவித்துள்ளார். மாநில அரசு கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை என்றும், இதுபோன்ற சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.
ராஜீவ் சுக்லா கருத்து:
பெங்களூரு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா “பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்சிபி அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது .
நெரிசல் அல்லது அதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் ரோட் ஷோவை நிறுத்தியது. ஆனால், மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. சேதக் கட்டுப்பாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
பெங்களூரு நெரிசல்:
18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வெற்றியை சுவைத்த ஆர்சிபி அணிக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நிலைக்கவில்லை, நேற்று பெங்களூருவில் வெற்றி விழா அணிவகுப்பு கர்நாடக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் சின்னச்சாமி மைதானத்திற்கு வெளியே மக்கள் அதிக அளவில் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்ப்பட்டு மக்கள் சிக்கினர். இதில் சில பேருக்கு மூச்சு திணறல் ஏற்ப்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தனர். இந்த 30-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 11 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர்.
நேரில் கண்ட சாட்சிள் தந்த தகவலின்படி, பாராட்டு விழா நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. காயமடைந்தவர்களையும், மயக்கமடைந்தவர்களையும் போலீசார் ஆம்புலன்ஸ்களில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் இருந்த சிலருக்கு அருகில் இருந்தவர்கள் இருதய நுரையீரல் மறுமலர்ச்சி (CPR) சிகிச்சை அளித்து முதலுதவி செய்யும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவின. அதே நேரத்தில், ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஒரே நேரத்தில் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால், கூட்டத்தை நிர்வகிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஏற்பாடு செய்திருந்த RCB அணிக்கு மைதானத்தில் சிறப்பு பாராட்டு விழா நடைபெறுவதற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் போலீசார் லேசான தடி அடியை நடத்தினர்.