இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும் ( டக்வொர்த் லிவீஸ்), 2வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


மிரட்டிய ரிங்குசிங்:


நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரிங்குசிங் முதன்முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார். 105 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது களமிறங்கிய ரிங்குசிங் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். அவருடன் ஆடிய ருதுராஜ் அரைசதம் விளாசிய பின்பு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷிவம் துபே பந்துகளை விளாச முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.


ஆனாலும், ஓரிரு ரன்களாக சேர்த்துக் கொண்டிருந்த ரிங்குசிங் கடைசி கட்டத்தில் தனக்கே உரிய பாணியில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். 19வது ஓவரில் மெக்கர்த்தி வீசிய ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரியும், 2 சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோரும் மளமளவென எகிறியது.






அபார பேட்டிங்:


கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளை ஷிவம் துபே சிக்ஸருக்கு விரட்ட 4வது பந்தில் ரிங்குசிங் அட்டகாசமான சிக்ஸர் ஒன்றை விளாசி அதகளப்படுத்தினார். அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாச முயற்சித்து ஆட்டமிழந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சர்வதேச போட்டியில் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலே சரவெடியாக வெடித்து தன்னுடைய தேவையை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.




இந்திய அணிக்கு நெருக்குடி அளிக்கும் விதத்தில் வேகம், சுழல் என மாறி, மாறி தாக்குதல் நடத்திய அயர்லாந்து அணிக்கு எதிராக ரிங்குசிங் 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 ரன்கள் விளாசினார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் பினிஷிங் என்பது மிக பரிதாபமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. ரிங்குசிங் ஐ.பி.எல். தொடரிலே பல போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக அதை செய்த நிலையில், இந்திய அணிக்காகவும் பினிஷிங் ரோலுக்காகவே அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வருங்கால இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ரிங்குசிங் திகழ்வார் என்பதை நேற்றைய போட்டியில் அவர் தன்னம்பிக்கையுடன் ஆடிய விதமே ரசிகர்களுக்கு உணர்த்தியது.


மேலும் படிக்க:FIDE Chess World Cup: கார்ல்சனுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்..? ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இன்று மோதல்!


மேலும் படிக்க: Messi Record: அண்ணா வரார் வழி விடு..! கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை.. 44 சாம்பியன் பட்டங்கள்..