நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 டி20 போட்டிகளை இந்தியா வென்ற நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
மழையால் தடை:
கடைசி டி20 போட்டி என்பதால் இரு அணிகளும் அதிரடியாக ஆடும் என்றும் என்று மைதானத்தில் ஆவலுடன் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மழை பெய்து வரும் காரணத்தால் தற்போது வரை டாஸ் போடப்படவில்லை. மைதானம் கூரையால் மூடப்பட்டுள்ளது. ரசிகர்கள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர்.
மழை நின்றதும் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக உள்ளது. சாம்சன், ரிங்குசிங், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பாக ஆடுவது வரவேற்கத்தக்கது. பந்துவீச்சில் பும்ரா சிறப்பான கம்பேக் அளித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் காத்திருப்பு:
இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படாத ஆவேஷ்கான், ஷபாஸ் அகமது, முகேஷ்குமார், ஜிதேஷ்ஷர்மா ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. முதல் 2 போட்டியில் ஆடிய வீரர்களே இளம் வீரர்கள்தான் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியே ஆகும்.
அயர்லாந்து அணியை பொறுத்தவரையில் ஸ்டிர்லிங், பால்ப்ரைன், டெக்டர், டக்கர், காம்பெர், மெக்கர்த்தி பேட்டிங்கில் அசத்தக்கூடியவர்கள். கடந்த 2 போட்டியில் கேப்டன் ஸ்டிர்லிங் சிறப்பாக ஆடவில்லை. கடந்த போட்டியில் அசத்திய பால்ப்ரைன் இந்த போட்டியிலும் அசத்துவார் என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏனென்றால், ஸ்டிர்லிங் – பால்ப்ரைன் ஜோடி நிலைத்து நின்றுவிட்டால் இமாலய இலக்கையும் எட்டக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள்.
இந்திய அணிக்கு நிகராகவே சிறப்பான பந்துவீச்சை அயர்லாந்து அணி கொண்டுள்ளது. மெக்கர்த்தி, லிட்டில், ஒயிட் என வேகம், சுழலில் அவர்கள் சிறப்பாகவே செயல்படுகின்றனர். இன்றைய போட்டி நடைபெற்றால் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும்.
மேலும் படிக்க: IND Vs IRE 3rd T20 LIVE Score: கொட்டும் மழை.. டாஸ் போடுவதில் தாமதம்.. ரசிகர்கள் சோகம்..!
மேலும் படிக்க: Chess World Cup 2023 Final: உலகக்கோப்பை செஸ் தொடர் : இரண்டாவது போட்டியும் டிரா.. உலகக்கோப்பை யாருக்கு? நாளை இறுதிச்சுற்று..