ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2023 துவங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், ஆசிய அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன. இந்திய அணி இரு தினம் முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்த விவாதங்களின் சூடு இன்னும் ஆறிய பாடில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஆன ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின் அணியுடன் பயிற்சியில் இணைவதாக தகவல்கள் வந்துள்ளன.

முதல் போட்டி இந்த மாதம் 30 ஆம் தேதியே துவங்கினாலும், இந்தியாவிற்கு முதல் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதிதான் துவங்குகிறது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியோடு மோதுகிறது.

இதுவரை வென்ற அணிகள்

ஆசியக்கோப்பை என்பது ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியாக உள்ளது. இது 1984 ஆம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய ஆண்டு உலககோப்பை வென்ற இந்திய அணி முதல் ஆசியக் கோப்பையையும் வென்றது. ஆசியக்கோப்பை வரலாற்றில் இந்தியா தான் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது. 

இந்தியா 7 முறை கோப்பையை வென்றுள்ளது (1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018). அதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி உள்ளது. நடப்பு சாம்பியன் ஆன அவர்கள் 6 முறை கோப்பையை வென்றுள்ளனர் (1986, 1997, 2004, 2008, 2014, 2022). 

தொடர்புடைய செய்திகள்: Tilak Varma: ஆசியக்கோப்பை அணியில் திலக் வர்மா… ஏன் இவ்வளவு விமர்சனம்? மூன்று முக்கிய காரணங்கள் இதுதான்!

அதிகமுறை இறுதிப்போட்டிக்கு வந்தவர்கள்

இம்முறை இலங்கை வென்றால்அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற இந்தியாவை சமன் செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக 2 முறை கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான் அணி (2000, 2012). இவர்களை தவிர்த்து வேறு எந்த அணியும் வெல்லாத நிலையில் வங்கதேசம் மட்டும் 3 முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு அதிக முறை வந்த அணி என்று பார்த்தால் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

அவர்கள் 10 முறை இறுதிப்போட்டிக்கு வந்து 6 முறை தோல்வியை சந்தித்துள்ளனர். அதன் பிறகு இந்தியா(9), பாகிஸ்தான் (4), வங்கதேசம் (3) ஆகிய அணிகள் உள்ளன. முதல் இரண்டு ஆசியக்கோப்பை போட்டிகளில் மூன்று அணிகள் மட்டுமே கலந்து கொண்டதால் அவற்றில் இறுதிப்போட்டிகள் நடத்தப்படவில்லை. புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. முதன் முதலில் இறுதிப்போட்டி நடைபெற்றது 1988 ஆசியக் கோப்பை போட்டியில்தான். அதிலும் இந்திய அணி வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

ஆண்டு

வென்ற அணி

இரண்டாம் இடம்

நடத்திய நாடு

1984

இந்தியா

இலங்கை 

UAE 

1986

இலங்கை

பாகிஸ்தான் 

இலங்கை

1988

இந்தியா

இலங்கை

வங்கதேசம்

1991

இந்தியா

இலங்கை

இந்தியா

1995

இந்தியா

இலங்கை

UAE 

1997

இலங்கை

இந்தியா

இலங்கை

2000

பாகிஸ்தான்

இலங்கை

வங்கதேசம்

2004

இலங்கை

இந்தியா

இலங்கை

2008

இலங்கை

இந்தியா

பாகிஸ்தான்

2010

இந்தியா

இலங்கை

இலங்கை

2012

பாகிஸ்தான்

வங்கதேசம்

வங்கதேசம்

2014

இலங்கை

பாகிஸ்தான்

வங்கதேசம்

2016

இந்தியா

வங்கதேசம்

வங்கதேசம்

2018

இந்தியா

வங்கதேசம்

UAE

2022

இலங்கை

பாகிஸ்தான்

UAE

2023

???

???

பாகிஸ்தான், இலங்கை

இதுவரை நடைபெற்ற நாடுகள்

15 சீசன்கள் நடைபெற்றுள்ள இந்த தொடர், இந்த போட்டிகள் ஒரே ஒரு முறை மட்டுமே இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் பொதுவாக இவை, UAE, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

இதில் இரண்டாவது ஆசியகோப்பையில் இந்தியாவும், 1991 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகள் அறிமுகமான பின், ஒரு சீசன் டி20 தொடராகவும் அடுத்த சீசன் ஒருநாள் தொடராகவும் நடத்தப்பட்டு வருகிறது. குறுகிய கால போட்டியாக இருக்கும் இதில் மிகக்குறைவான குரூப் போட்டிகளே ஆடப்படுகின்றன. இம்முறையும் வெறும் 6 போட்டிகள் மட்டுமே ஆடப்படுகின்றன. அதன்பின் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு சென்று விடுகிறார்கள்.