சூர்யகுமார் யாதவை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர் இவ்வருடத்தில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக முன்னெறியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
சிட்டகாங்கில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்தது. அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் 169 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது நாள் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்த அவர், 192 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இந்த ரன்களை குவித்ததன் மூலம், அனைத்து வடிவங்களிலும் 38 இன்னிங்ஸ்களில் 1489 ரன்களுடன் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் ஆனார். ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 111 பந்துகளில் 113* ரன்கள் எடுத்ததே அவரது இந்த வருட அதிகபட்ச ஸ்கோராகும்.
அடுத்தடுத்த இடங்களில் யார்?
ஷ்ரேயாஸ் ஐயர் இப்போது 43 இன்னிங்ஸ்களில் 1424 ரன்கள் குவித்துள்ள சூர்யகுமார் யாதவை முந்தியுள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 117 ஆகும். இதற்கிடையில், விராட் கோலி 39 இன்னிங்ஸ்களில் 1304 ரன்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரது அதிகபட்சம் 122* ஆகும். நான்காவது இடத்தில் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் 41 இன்னிங்ஸில் 1278 ரன்களுடன் உள்ளார், அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 146. ரோஹித் சர்மா 40 இன்னிங்ஸில் 995 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார், இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 76* ஆகும்.
குவியும் பாராட்டுக்கள்
நேற்றைய போட்டியில் சரிந்த அணியை மீட்டு கொண்டுவந்த நிலையில் ரசிகர்கள் ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமினின்றி அவர் இவ்வருடம் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக மாறியுள்ள நிலையில் அவரைப் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்தன.பலர் இது ஷ்ரேயாஸ் ஐயருக்கு ட்ரீம் இயர் என்று கூறினர்.
நெட்டிசன் கருத்துகள்
இதற்கிடையில், மற்றொருவர், "ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிறப்பான அரைசதம். வங்கதேசத்திற்கு எதிராக சவாலான நிலையில் 93 பந்துகளில் 51* ரன்கள் எடுத்தார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்கிறார்." என்று கமெண்ட் செய்திருந்தார். இன்னொரு ரசிகர், "ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஒரு வருடம் - இந்த ஆண்டு முழுவதும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்." என்று எழுதியுள்ளார். இந்த ஆட்டத்தில் சட்டேஷ்வர் புஜாரா 11 பவுண்டரிகள் உட்பட 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், விராட் கோலி 5 பந்துகளில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 45 பந்துகளில் 46 ரன்களை எடுத்த பந்த் இன் அதிரடி நாக் முக்கியமானது. பங்களாதேஷ் தரப்பில் தைஜுர் இஸ்லாம் தற்போதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மெஹிதி ஹசன் இரண்டு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார், எபாடட் ஹூசைன், காலித் அஹமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.