பணி சுமை காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இதையடுத்து, வருகிற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு டிம் சவுதி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சமீபகாலமாக கேப்டனாக சிறப்பாக தலைமை தாங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 2015 மற்றும் 2019 உலகக் கோப்பை ஒருநாள் இறுதிப்போட்டி தோல்வி, 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தோல்வி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
2016 ம் ஆண்டு பிரண்டன் மெக்கலம் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு, நியூசிலாந்து அணியின் மூன்று பார்மேட்டிலும் கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்றார்.
கேப்டன் பதவி பெற்ற பிறகு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அனைத்து விதமான பார்மேட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டது. இவர் தலைமையில் இதுவரை நியூசிலாந்து அணி 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 22 வெற்றிகள், 8 டிரா, 10 தோல்விகள் பெற்றிருந்தது. இதனால் இவர் வெற்றிகரமான கேப்டனாகவே கருதப்பட்டார்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கடந்த 2021 ம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இருப்பினும், கடந்த சில இறுதிப்போட்டி தோல்வியால் எழுந்த விமர்சனம் மற்றும் பணிச்சுமை காரணமாக டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகினார். மேலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் சவுதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய கேன் வில்லியம்சன், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதையாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்ச வடிவமைப்பு. அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். கேப்டனாக இருப்பது அதிக பணிச்சுமை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்கிறது. எனது சர்வதேச வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்.
"நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளுடன் வெள்ளை-பந்து வடிவங்களைத் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன். டிம்மை கேப்டனாகவும், டாமை துணை கேப்டனாகவும் செயல்பட ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது சர்வதேச வாழ்க்கையின் பெரும்பகுதியில் இருவருடனும் விளையாடியுள்ளதால், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது மற்றும் மூன்று வடிவங்களிலும் பங்களிப்பது எனது முதன்மையான முன்னுரிமையாகும், மேலும் நாங்கள் வரவிருக்கும் கிரிக்கெட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்தார்.
டெஸ்டில் கேப்டனாக வில்லியம்சன் ரெக்கார்ட்:
- 40 டெஸ்ட். 22 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி
- 22 டெஸ்ட் வெற்றிகளில் வில்லியம்சன் எட்டு சதங்களுடன் 79 சராசரி வைத்துள்ளார்.
- கேப்டனாக வில்லியம்சன் 11 சதங்கள் அடித்தது மிகப்பெரிய சாதனையாகும்.
- 40 டெஸ்ட் அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்த அனைத்து வீரர்களில், வில்லியம்சனை (57.43) விட பிரையன் லாரா மட்டுமே கேப்டனாக (57.83) அதிக சராசரியைக் கொண்டுள்ளார்.