கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இதன் காரணமாக நாளை சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.


தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருதினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல சுழற்சியானது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது.






புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:


இந்நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






இதனிடையே, கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை,  லட்சதீவிற்கு வடமேற்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும்,  கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து மேற்கு - தென் மேற்கு பகுதியில் 580 கிமீ தொலைவிலும் அமைந்திருந்தது. தொடர்ந்து, தற்போது அந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, லட்சதீவிற்கு வடமேற்கே 580 கிலோ மீட்டர் தொலைவிலும்,  கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து மேற்கு - தென் மேற்கு பகுதியில் 630 கிமீ தொலைவிலும் நகர்ந்துள்ளது. அதேவழியில் தொடர்ந்து நகர்ந்து அந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவிழக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.