அயர்லாந்து அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொணடு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.


வெளிநாட்டு மண்ணில் முதல் சதம்:


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 214 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை குவித்தது. இதையடுத்து, தங்களது 2வது இன்னிங்சில் ஆடி வரும் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் கோம்மின்ஸ், மெக்கொல்லம், கேப்டன் பால்பிரைன் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினாலும் ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் கூட்டணி சிறப்பாக ஆடியது. ஹாரி டெக்டர் 56 ரன்களில் அவுட்டானாலும், லோர்கன் டக்கர் அபாரமாக ஆடினார்.




தனி ஆளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் அடித்து அசத்தினார். அயர்லாந்து அணிக்காக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லோர்கன் டக்கர் படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை பெற்ற நாடுகள் என்றால் அது அயர்லாந்தும், ஆப்கானிஸ்தானுமே ஆகும். இந்த நிலையில், அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


அயர்லாந்து போராட்டம்:


3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அயர்லாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் 251 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. தற்போது ஆண்டி மெக்பிரைன் 50 ரன்களுடனும், மார்க் அடெய்ர் 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். வங்காளதேச அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் ரஹீம் 126 ரன்களும், கேப்டன் ஷகிப் அல்ஹசன் 87 ரன்களும் குவித்தனர்.




முக்கிய வீரரான மெஹிதி ஹாசன் 55 ரன்களும், லிட்டன்தாஸ் 43 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். அயர்லாந்து அணியின் ஆண்டி மெக்பிரைன் சிறப்பாக பந்துவீசி 28 ஓவர்கள் பந்துவீசி 118 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அயர்லாந்து அணி தற்போது வங்காளதேச அணியை காட்டிலும் 100 ரன்களே முன்னிலை வகிக்கிறது. போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளதால் இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே அயர்லாந்து அணி தோல்வியை தவிர்க்க முடியும்.


அயர்லாந்து அணிக்காக 2வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆடும் லோர்கன் இதற்கு முன்பு ஆடிய டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். 26 வயதே ஆன லோர்கன் டக்கர் தற்போது தான் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்காக முதன்முதலாக சதம் அடித்த வீரர்  என்ற பெருமையை கெவின் ஓ ப்ரையன் தன்வசம் வைத்துள்ளார்.


மேலும் படிக்க: Kane Williamson: நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடி.. கிழிந்த முழங்கால் தசை.. உலகக்கோப்பை தொடரை இழக்கும் வில்லியம்சன்!


மேலும் படிக்க: