இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்த பிறகு டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.


இந்திய அணிக்கு அபராதம்:


இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணிக்கு மற்றொரு பேரிடியாக ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. அதாவது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளையும் குறைத்துள்ளது. ஐ.சி.சி.யின் இந்த அபராதம் இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏனென்றால், முதல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை கைவிட்ட இந்திய அணி இந்த முறை அதை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்வி இந்திய வீரர்களை கடுமையாக பாதித்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சொதப்பலாகவே இந்திய அணியின் செயல்பாடு இந்த போட்டியில் இருந்தது.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்:


தற்போது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளும் குறைந்துள்ளது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீச வேண்டிய ஓவரை விட 2 ஓவர்கள் குறைவாக வீசியதால் போட்டி அம்பயர்கள் அபராதம் விதித்தனர்.


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு சென்றது. தற்போது, ஐ.சி.சி.யின் அபராதத்தை தொடர்ந்து இந்தியா 6வது இடத்திற்கு சென்றுள்ளது. தற்போது இந்திய அணி வெறும் 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்தியா வெறும் 3 போட்டிகள் மட்டுமே ஆடி 1 வெற்றி 1 தோல்வி 1 டிராவுடன் உள்ளது.


6வது இடத்தில் இந்தியா:


தென்னாப்பிரிக்க அணி 1 டெஸ்ட் ஆடி 1 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 7 டெஸ்ட் போட்டிகள் ஆடி 4 வெற்றி 2 தோல்வி 1 டிராவுடன் 42 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் புள்ளிகளின் அடிப்படையில் இல்லாமல் ரேட்டிங் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறது.


அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க 100 சதவீதம், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் இருப்பதால் முதல் 2 இடங்களில் உள்ளனர். 4வது இடத்தில் வங்கதேசமும், 5வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளனர். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்து இந்த தரவரிசைப்பட்டியல் மாறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2025ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டிக்குச் செல்லும். இந்திய அணி தற்போது 38.89 சதவீதத்துடன் 6வது இடத்தில் உள்ளது.


மேலும் படிக்க: IND vs SA 1st Test: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்... தென்னாப்பிரிக்கா வெற்றி!


மேலும் படிக்க:Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!