அம்பதி ராயுடு:
இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இவர் 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை தோனியுடன் இணைந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.
இச்சூழலில், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அம்பதி ராயுடு விரைவில் அரசியல் கட்சியில் இணையப்போகிறார் என்ற செய்திகள் பரவின.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார்:
இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு ஆட்சி கட்டிலில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. அதன்படியே அம்பதி ராயுடு இன்று (டிசம்பர் 28) அரசியல் பிரவேசம் செய்துள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அப்போது அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அவருக்கு சால்வை மற்றும் கட்சியின் துண்டு போர்த்தி வரவேற்றனர்
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில்‛‛பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் முகாம் அலுவலகத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாதி ராயுடு தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!