இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்பு எல்லாம் பல கிரிக்கெட் வீரர்களை கொடுத்த பெருமை மும்பை, டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களை சேரும். அதில் குறிப்பாக டெல்லியில் இருந்து பல வீரர்கள் உருவாக காரணமாக இருந்தவர் தாரக் சின்ஹா. சுரிந்தர் கண்ணா, மனோஜ் பிராபகர் என தொடங்கி இந்திய அணிக்கு பல சிறப்பான வீரர்களை இவர் பட்டை தீட்டி தந்துள்ளார். 


1950ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் தாரக் சின்ஹா. இவர் சிறுவயது முதல் கிரிக்கெட் மீது காதல் வயப்பட்டு இருந்தார். ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக வேண்டும் என்று இவர் விரும்பினார். ஆனால் 1969ஆம் ஆண்டு சி.கே.நாயுடு தொடருக்கான டெல்லி அணியில் இவர் இடம்பெறவில்லை. அந்த சமயத்தில் டெல்லி அணியின் கேப்டனாக சல்மான் குர்ஷீத் இருந்தார். அப்போது தாரக் சின்ஹா ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தார். அதாவது டெல்லியில் பல வீரர்கள் உருவாக ஒரு நல்ல பயிற்சி அகாடமி தேவை என்பது தான் அது. அதிலும் குறிப்பாக அவரை போல் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க ஒரு நல்ல பயிற்சி கூடம் வேண்டும் என்று நினைத்துள்ளார். 




இதற்காக சொனட் கிளப்(Sonnet Club) என்ற பயிற்சி மையத்தை தொடங்கினார். அப்போது முதல் டெல்லியில் பல வீரர்கள் உருவாக தொடங்கினர். அந்த பயிற்சி அகாடமியில் இருந்து முதலில் இந்தியாவிற்கு வந்தவர் சுரிந்தர் கண்ணா. அவருக்கு பின்பு டெல்லி அணியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்தவர் மனோஜ் பிரபாபகர். இவர் முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். 


அப்போது மனோஜ் பிரபாகரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகி ஒருவர் நீ உன்னுடைய பந்துவீசும் முறையை மாற்றாமல் விட்டால் நீண்ட நாட்கள் அணியில் விளையாட முடியாது என்று கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு சற்று பதட்டம் அடைந்த மனோஜ் பிரபாகர் தன்னுடைய பயிற்சியாளரான தாரக் சின்ஹாவை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு தாரக் சின்ஹா, “உன்னுடைய பலமே உன்னுடைய வித்தியாசமான பந்துவீசும் முறைதான். அதை நீ எதற்காகவும் யாருக்காகவும் மாற்ற வேண்டாம்” என்று அறிவுரை வழங்கியுள்ளார். தன்னுடைய பயிற்சியாளரின் அறிவுரையை கேட்ட மனோஜ் பிரபாகர் சிறப்பாக பந்துவீசி முதல் போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 




அவரைத் தொடர்ந்து ஆஷிஷ் நெஹ்ரா, ஆகாஷ் சோப்ரா,ஷிகார் தவான் என பல வீரர்கள் இவருடைய சொனட் கிளபிலிருந்து உருவாகியிருந்தனர். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் வரை பல வீரர்கள் இவருடைய பயிற்சி பட்டறையில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட்டிற்காக இவர் அர்பணித்துள்ளார். இது தவிர இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சில ஆண்டுகள் இருந்தார். அப்போது இவருடைய பயிற்சியில் அஞ்சும் சோப்ரா, மித்தாலி ராஜ் உள்ளிட்ட வீராங்கனைகள் சிறப்பாக வளர தொடங்கினர்.


குறிப்பாக டெல்லியில் இருந்து வந்த அஞ்சும் சோப்ரா இவருடைய பயிற்சியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வந்தவர். இவருடைய சிறப்பான பயிற்சியை பாராட்டி இந்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு துரோணாச்சார்யா விருதை வழங்கி கௌரவம் செய்தது. இப்படிப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தக்காரரான தாரக் சின்ஹா இன்று நுரையில் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவருடைய தயாரிப்பில் உருவாகிய வீரர்களின் சாதனை பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. 


மேலும் படிக்க: 'வந்தாய் அய்யா... வந்தாய் அய்யா...' கெயில் மற்றும் பிராவோவிற்கு சென்ட் ஆஃப் அளிக்கும் ரசிகர்கள்!