டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டிகளில் இன்று நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் எவின் லூயிஸ் அதிரடி காட்டினர். கிறிஸ் கெயில் 2 சிக்சர்கள் விளாசி 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் கேப்டன் பொல்லார்டு(44), எவின் லூயிஸ்(29),ஹெட்மேயர்(27) ஆகியோர் மட்டும் ஒரளவு ரன்கள் அடித்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய பிராவோ ஒரு சிக்சருடன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கும் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக வழி அனுப்பி வைத்தனர்.
டி20 போட்டிகளின் பிராட்மேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பான டி20 வீரராக வலம் வந்தவர் கிறிஸ் கெயில். அவர் கடைசியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்று பல ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கிறிஸ் கெயில் இதுவரை டி20 போட்டிகளில் 22 முறை சதம் கடந்துள்ளார். அத்துடன் டி20 போட்டிகளில் 1043 சிக்சர்கள் விளாசியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு சென்ட் ஆஃப் பதிவுகளை செய்து வந்தாலும் இதுவரை கிறிஸ் கெயில் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெரும் பிராவோவிற்கும் ரசிகர்கள் சென்ட் ஆஃப் அளிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: 'நியூசிலாந்தை எப்படியாவது ஜெயிச்சிருங்க அய்யா'- மீம்ஸ் தெறிக்கவிடும் இந்திய ரசிகர்கள்!