இந்திய அணியின் தலைமை பயிற்சியளராக ராகுல் ட்ராவிட் நியமிக்கப்படவுள்ளார் என அண்மைக்காலமாக தொடர்ந்து தகவல் வெளியாகிவந்த நிலையில், அண்மையில் பிசிசிஐ ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தநிலையில், ராகுல் டிராவிட் வகித்துவந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநர் யார் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தப் பொறுப்பிற்கு வி.வி.எஸ். லட்சுமணனை நியமிக்க பிசிசிஐ விரும்பியதாகவும், ஆனால் லட்சுமணன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் பிசிசிஐயின் அதிகாரபூர்வ வட்டாரங்கள், வி.வி.எஸ். லட்சுமணனை தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக நியமிக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளன. பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் வி.வி.எஸ். லட்சுமணன் அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அதேநேரத்தில் இதுதொடர்பான இறுதி முடிவை வி.வி.எஸ். லட்சுமணன்தான் எடுக்க வேண்டும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் டிராவிட்டை நியமிக்க முயற்சிகள் நடந்தன. சமீபத்தில் இவர், இப்பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் சுலக்சனா நாயக், ஆர்.பி. சிங் இடம் பெற்றுள்ள பி.சி.சி.ஐ., ஆலோசனை குழு, புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமனம் செய்தது. அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள டிராவிட், வரும் 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடர் வரை இப்பணியில் இருப்பார். இவருக்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து டிராவிட் கூறியது: "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். இதனை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இப்பணியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. இதனை தொடர விரும்புகிறேன்." என்றார்
மேலும், "தேசிய கிரிக்கெட் அகாடமி, 19 வயது அணி, இந்தியா 'ஏ' அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த போது தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிறைய இளம் வீரர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். எனவே இப்பணி மிகச் சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்த இரு ஆண்டுகளில் ஐ.சி.சி., தொடர்கள் நடக்கவுள்ளன. இத்தொடர்களுக்கு சிறந்த அணியை தயார் செய்து இந்தியாவுக்கு கோப்பை வென்று தர முயற்சிக்க வேண்டும்." என்று டிராவிட் கூறினார். பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ''டிராவிட் மிகச் சிறந்த வீரர். இந்திய கிரிக்கெட், இளம் வீரர்களை உருவாக்கும் என்.சி.ஏ.,வுக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்திய அணி புதிய உச்சத்தை எட்டும் என்று நம்புகிறேன்,'' என்றார்.