இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி. முன்னாள் கேப்டனான விராட்கோலி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது.
சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி கடந்த வியாழக்கிழமை பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடியது. இதற்காக, இந்திய அணியினர் பெர்த் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அந்த ஹோட்டல் பணியாளர் ஒருவர் விராட்கோலி தங்கியிருந்த அறையில் விராட்கோலியின் உடைமைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய வீரர் விராட்கோலி தனியுரிமை மீறப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது ரசிகர் பதிவிட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விராட்கோலி கூறியிருப்பதாவது,
“ ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைகின்றனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் எப்போதும் ஊக்குவிக்கிறேன். ஆனால், இந்த வீடியோ என்னுடைய தனியுரிமை பற்றியது. ஹோட்டலில் எனது சொந்த அறையில் எனக்கு தனியுரிமை இல்லாவிட்டால், தனியுரிமையை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்?
இந்த வகையான ரசிப்புத்தன்மையுடன் எனக்கு உடன்பாடில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும். அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.சி.சி. நம்ப முடியாத ஏமாற்றம் என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விராட்கோலியிடம் இந்திய அணி நிர்வாகம், புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், விராட்கோலி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Team India Squad: இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக், தவான்.. நியூசிலாந்து, பங்களாதேஷ் எதிரான இந்திய அணி அறிவிப்பு!