வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணிகள் இன்று டிரினிடாட்டில் நடைபெற்று வரும் பிரையன் லாரா மைதானத்தில் ஆடி வருகின்றனர். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் ரோகித்சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் உனத்கட்:


பந்துவீச்சை பொறுத்தவரையில் முகேஷ்குமார், ஷர்துல் தாக்கூர் ஆகிய இளம் வீரர்களுடன் அனுபவமிக்க மூத்த பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உனத்கட் இந்திய அணிக்காக கடைசியாக 2013ம் ஆண்டு விளையாடியிருந்தார். அதற்கு பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.




31 வயதான உனத்கட் இந்திய அணிக்காக 9 ஆண்டுகள் 8 மாதங்கள் 11 நாட்களுக்கு பிறகு அதாவது 3540 நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக திரும்பியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு உனத்கட் இந்திய அணிக்காக திரும்பியிருப்பதற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


2013க்கு பிறகு தற்போது:


இந்திய அணிக்காக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டி மூலமாக அறிமுகமான ஜெய்தேவ் உனத்கட் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள், 8 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகள் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், 2013ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக ஜூலை மாதம் அறிமுகமான ஜெய்தேவ் உனத்கட், அதே ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நவம்பர் மாதம் கடைசியாக ஒருநாள் போட்டிகளில் ஆடினார்.




அதன்பின்பு, 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 2018ம் ஆண்டு டி20 போட்டிகளில் ஆடிய பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


31 வயதான ஜெய்தேவ் உனத்கட் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து ஆடி வரும் ஜெய்தேவ் உனத்கட் 94 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 91 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


ஜெய்தேவ் உனத்கட்டை விட இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி கொண்ட வீரர்கள் 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Watch Video: அஜித் பட பாணியில் ஆஸ்திரேலியாவிற்கு அல்வா கொடுத்த ஸ்டூவர்ட் பிராட்..! நீங்களே பாருங்க..!


மேலும் படிக்க: Watch Video: பந்துவீச சென்ற ஷகிப் அல் ஹசன்.. மைதானத்தின் உள்ளே வந்த பாம்பு.. கேலி செய்த தினேஷ் கார்த்திக்..