இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொள்ளும்போது ஏற்படும் பரபரப்பு இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின்போதும் இருக்கும். இரு அணிகளும் மோதிக்கொண்ட நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.


அச்சுறுத்திய மர்ஃபி - அலெக்ஸ் கேரி:


இதில், லண்டன் ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணிக்கு 394 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் – கவாஜா ஜோடி 140 ரன்களை முதல் விக்கெட்டிற்கு சேர்க்க அடுத்து வந்த ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்தது. அப்போது ஜோடி சேர்ந்த டூட் மர்ஃபி – அலெக்ஸ் கேரி ஜோடி நிதானமாக ஆடியது.






அந்த ஜோடி உறுதியுடன் ஆடியது இங்கிலாந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சற்று பீதியை ஏற்படுத்தியது. அவர்கள் சிறுக, சிறுக ரன்களை சேர்த்து இலக்கை நோக்கி முன்னேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மர்ஃபி – அலெக்ஸ் கேரி ஜோடி நங்கூரமிட்டதால் அவர்களை பிரிக்க வேண்டிய கட்டாயம் இங்கிலாந்திற்கு ஏற்பட்டது.


பெயில்சை மாற்றி வைத்த பிராட்:


சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மர்ஃபி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 91வது ஓவரை வீசிக்கொண்டிருந்த ஸ்டூவர்ட் பிராட் அந்த ஓவரின் கடைசி பந்தை மாற்றும் முன்பு ஸ்டம்பில் இருந்த பெயில்சை மாற்றி வைத்தார். அதைப்பார்த்தபோது, அஜித் நடித்த அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற  கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா? என்ற காமெடி காட்சியே நினைவுக்கு வந்தது. ஆனால், பிராடிற்கு அதிர்ஷ்டம் கைகூடியது என்றே சொல்ல வேண்டும்.






அடுத்த பந்தே பிராட் வீசிய பந்தில் இங்கிலாந்திற்கு குடைச்சல் தந்த டூட் மர்ஃபி பார்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அலெக்ஸ் கேரியும் 28 ரன்களில் பிராட் பந்தில் அவுட்டானார். இதனால், 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராடும் வெற்றியுடனும், விக்கெட்டுடனும் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்தார்.


பிராட் பெய்ல்சை மாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிராட் இந்த டெஸ்டில் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மேலும் படிக்க: Watch Video: பந்துவீச சென்ற ஷகிப் அல் ஹசன்.. மைதானத்தின் உள்ளே வந்த பாம்பு.. கேலி செய்த தினேஷ் கார்த்திக்..


மேலும் படிக்க: IND vs WI: தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி; மல்லுக்கட்டும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்..!