இந்தியாவில் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்பட்டு வருவது போல, ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயர்களில் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தி லங்கா பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது.


உள்ளே வந்த பாம்பு:


கிரிக்கெட் போட்டிகளின்போது மைதானங்களில் திடீரென நாய்கள், தேனீக்கள், பறவைகள் உள்ளே நுழைவதும், அதனால் ஆட்டம் தடைபடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லங்கா பிரிமீயர் லீக்கில் ஒரு போட்டியில் அழையா விருந்தாளியாக போட்டி நடைபெறும்போது பாம்பு மைதானத்தில் உள்ளே நுழைந்ததும், அதனால் ஆட்டம் தடைபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் உள்ள கொழும்புவில் பிரேமதாசா மைதானத்தில் காலே டைட்டன்ஸ் – தம்புல்லா ஆரா அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்குடன் தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. இந்த நிலையில், காலே டைட்டன்ஸ் அணிக்காக வங்காளதேத்தின் அனுபவ ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச தயாரானார்.






அப்போது, எல்லைக்கோட்டில் இருந்து மைதானத்தை நோக்கி ஏதோ ஊர்ந்து வருவதை வீரர்கள் பார்த்துள்ளனர். அதை உற்றுப்பார்த்தபோது பாம்பு என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், மைதானத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு வீரர்கள் பாம்பை பத்திரமாக அகற்றினர். இந்த சம்பவத்தில் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மைதானத்தின் குறுக்கே பாம்பு திடீரென உள்ளே வந்த சம்பவம் வீரர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினேஷ் கார்த்திக் கேலி:


பாம்பு உள்ளே வந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், மீண்டும் வந்த நாகின். இந்த பாம்பு வங்காளதேசத்தை சேர்ந்ததாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கேலியாக பதிவிட்டுள்ளார். ஷகிப் அல் ஹசன் பந்துவீச தயாரானபோது இந்த பாம்பு வந்ததாலும், வங்காளதேச வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளின்போது இதுபோன்று பாம்பு நடனம் ஆடி அதை அவர்களது தனித்துவமாக காட்டிக்கொள்வதையும் கிண்டல் செய்யும் விதமாக தினேஷ் கார்த்திக் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


இதே வங்காளதேச அணிக்கு எதிராக கடைசி 1 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த வங்காளதேச வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசிய தினேஷ் கார்த்திக்தை வங்காளதேச அணியினரும், கிரிக்கெட் ரசிகர்களும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Asian Champions Trophy Tickets: இன்னும் இரு தினங்களில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்.. டிக்கெட் விற்பனை கட்டண விபரம் இதோ..!


மேலும் படிக்க: IND vs WI: தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி; மல்லுக்கட்டும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்..!