தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில் இன்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகள் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் நிறைவு செய்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் 768 நாட்கள் விராட் கோலி இருந்துள்ளார். 

இந்திய கேப்டன் விராட் கோலி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 652 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் இந்த காலகட்டங்களில் வெறும் 5 முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். 

விராட் கோலியின் இரண்டு ஆண்டுகள் செயல்பாடுகள்:

ஆண்டு போட்டிகள் ரன்கள் அரைசதம் சதம் 
2020-2021 14 652 5 0

இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதம் கடந்து 768 நாட்களுக்கு மேலாகியுள்ளது. 


அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் தற்போது 27 மாதங்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தற்போது வரை 43 சதங்கள் அடித்துள்ளார். 

ஆண்டு வாரியாக விராட் கோலியின் ஒருநாள் சதங்கள்:

ஆண்டு    கோலி அடித்த சதங்கள் 
2009           1
2010          3
2011          4
2012           5
2013       4
2014         4
2015       2
2016        3
2017         6
2018    6
2019    5
2020   0
2021  
0

இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடிக்காமல் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது விராட் கோலி சதம் கடந்து இந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க: சீனா முதல் எட்ஜ் வரை | 2021-ல் மறக்க முடியாத WWE கம்-பேக் சம்வங்கள்!