இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்து கொண்டது. அதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி, ஷமியின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்ரிக்க அணி.
இந்த இன்னிங்ஸில், முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஷமி, சில ரெக்கார்டுகளில் இடம் பிடித்திருக்கிறார். ஷமியின் ரெக்கார்டுகள் என்னென்ன, பார்ப்போம்.
1. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 195 விக்கெட்டுகளை எடுத்திருந்த ஷமி, ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டியிருக்கிறார்.
2. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ஷமி. கபில் தேவ், ஜாஹீர் கான், ஜவஹல் ஸ்ரீனாத், இஷாந்த் ஷர்மாவை அடுத்து இந்த பட்டியலில் இப்போது ஷமி இடம் பிடித்திருக்கிறார்.
3. அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகபந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
4. 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கடந்து கபில் தேவ் முதல் இடத்திலும், 54 போட்டிகளில் கடந்து ஜவஹல் ஸ்ரீனாத் இரண்டாம் இடத்திலும், 55 போட்டிகளில் கடந்து ஷமி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
5. ஒட்டு மொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில், 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் 11வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர்.
கிரிக்கெட் வட்டாரத்தில் வாழ்த்து:
ஷமியின் இந்த சாதனைக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள், இன்னாள் கிரிக்கெட்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரவி சாஸ்திரி, விவிஎஸ் லக்ஷ்மன், வாசிம் ஜாஃபர் ஆகியோர் ஷமிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்