உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இச்சூழலில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


டெஸ்ட் தொடர்:


இதில், டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதேபோல், இந்திய அணி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் போட்டிகளில் தொடரை வென்றதில்லை. முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 1- 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 1-2 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. 


இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்காவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.


வரலாறு படைக்க வேண்டுமா?


இச்சூழலில், இந்திய அணி இந்த தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸ்கில் 350 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்த அணி பேட்ஸ்மேன்கள் இதை செய்தால் போதும் மற்றதை பந்து வீச்சாளர்கள் பார்த்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில், ”இந்த தொடரில் வெல்வதற்கு இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். அங்குள்ள மைதானங்களில் நாம் நன்றாக பேட்டிங் செய்தால் இம்முறை தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு ஏற்படும்.


ஏனென்றால் இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. முகமது ஷமி நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரை போலவே நம்மிடம் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் தரமாக இருக்கிறார்கள். இருப்பினும் உமேஷ் யாதவ் ஏன் இத்தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், ”இத்தொடரில் தென்னாப்பிரிக்காவும் நல்ல அணியாக இருக்கிறது. ஆனால் நாங்கள் விளையாடிய காலங்களில் இந்தியாவை அச்சுறுத்திய அளவுக்கு தற்போதைய தென்னாப்பிரிக்க அணி இல்லை. எனவே இந்தியா வெற்றி பெறுவதற்கு முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 350 ரன்கள் எடுப்பது அவசியமாகும்” என்று  தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: IND vs RSA: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் செயல்பாடு எப்படி? டி20 வரலாறு இதுதான்!


மேலும் படிக்க: ICC Rankings: நம்பர் 1 T20 பவுலர்: ஆப்கானிஸ்தான் வீரரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்த இந்திய வீரர்!