இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் டி 20 போட்டிகளின் நம்பர் 1 பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதன்படி, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானை பின்னுக்குத் தள்ளி  முதல் இடத்தை பிடித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஐசிசி உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி கேப்பையை தவறவிட்டது.  உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர், உள்நாட்டில் நடைபெற்ற  5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது இந்திய அணி. இதில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 


கலக்கிய இளம் வீரர்கள்:


இந்த டி 20 தொடரில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, கே.எல்.ராகுல், முகமது ஷமி, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேநேரம் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை கண்டறியும் சோதனையில் ஈடுபட்ட பிசிசிஐ, ருதுராஜ் கெய்க்வாட், யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கியது. அவர்களும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல், பந்து வீச்சை பொறுத்தவரை ரவி பிஷ்னோய் சிறப்பாக விளையாடினார். 


முதல் இடத்தை பிடித்த ரவி பிஷ்னோய்:


5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில், தான் ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், டாப் 10 பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை முந்தியுள்ள ரவி பிஷ்னோய் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.


முன்னதாக, 692 புள்ளிகளை பெற்ற ரஷித் கானை முந்தியுள்ள ரவி பிஷ்னோய் தற்போது 699 புள்ளிகளுடன் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஆகியுள்ளார்.


 கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் தான் இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.


சர்வதேச அளவில்  இதுவரை 21 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை 7.50 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதேபோல்  பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.