ஐசிசி உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டி 20 தொடரில் விளையாடியது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இச்சூழலில், வரும் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி டிசம்பர் 10 ஆம் தேதி டி 20 போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி வெல்லுமா என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர்.
மறுபுறம், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்ல, ஹென்றிக்ஸ், க்ளாசென் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பதாலும், சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெறுவதாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், இந்திய அணிதான் இதற்கு முன்னர் அங்கு டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
டி 20 போட்டியில் இதுவரை:
சர்வதேச அளவில் இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க அணியுடன் 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 13 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்க அணி 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியுடன் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள்:
தென்னாப்பிரிக்க மண்ணில் டி 20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார் என்று பார்த்தால், ஷிகர் தவான் 143 ரன்களும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், எம்.எஸ்.தோனி 135 ரன்களும், ரோஹித் சர்மா 135 ரன்களும் எடுத்துள்ளனர்.
அதேபோல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி 20 போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. ஆனால், ரோகித் சர்மா மட்டும் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக மணிஷ் பாண்டே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 போட்டியில் 79 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்:
தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களாக, புவனேஷ் குமார் மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் இருக்கின்றனர். அதன்படி, புவனேஷ் குமார் 7 விக்கெட்டுகளையும், ஆர்பி சிங் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். மேலும், ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராகவும் புவனேஷ் குமார் தான் இருக்கிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.