இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்:



இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது.


இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 


இதில், முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 245 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.


அதோடு இந்த டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது இந்திய அணி.  முன்னதாக, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


தோல்விக்கு காரணம்:



அதேபோல், இந்த தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டியில் விளையாடாத இந்திய அணியினர் தங்களுக்குள்ளேயே குழுவாகப் பிரிந்து  இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டனர். இந்நிலையில், ஒரு பயிற்சி போட்டியில் கூட இந்திய அணியினர் விளையாடாதது தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், “தோல்விக்கான வெளிப்படையான காரணம் என்னவெனில் நீங்கள் இங்கே எந்த போட்டியிலும் விளையாடவில்லை. நீங்கள் இங்கே வந்து நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது வேலைக்காகாது. இன்ட்ரா ஸ்குவாட் போட்டி என்பது ஜோக்காகும். 


பணிச்சுமை என்று சொல்லாதீர்கள்:


இப்போதெல்லாம் 7 நாட்களுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள். ஏனெனில் சீனியர்கள் முதல் 2 போட்டிகளில் சொதப்பினாலும் கடைசி 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருவேளை சீனியர்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தான் விளையாடுவேன் என்று சொன்னால் இளம் வீரர்களை பயிற்சி போட்டியில் விளையாட வையுங்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: IND vs SA 1st Test: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்... தென்னாப்பிரிக்கா வெற்றி!


மேலும் படிக்க: IND vs SA: அச்சச்சோ! மெதுவாக பந்துவீசிய இந்திய அணி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை கழித்த ஐ.சி.சி