தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து புஜாரா 16 ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல் ரஹானேவும் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களில் ரிஷப் பண்ட் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இதன்காரணமாக இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இன்னும் ஒன்றரை நாட்கள் மீதமுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தென்னாப்பிரிக்க மண்ணில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2001ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 335 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா அணி நான்காவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை.
அதேசமயம் இந்திய அணிக்கு எதிராக கடைசியாக 1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்து வெற்றி பெற்றது. அதற்கு பின்பு 45 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அணியும் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘தினமும் பயிற்சிக்காக 30 கிலோமீட்டர் சைக்கிளில்..’ : உணர்ச்சிவசப்பட்ட ஷமியின் வீடியோ !