தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி சற்று முன்பு வரை 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரே ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். இந்த நேர்காணலை பிசிசிஐ பக்கம் வெளியிட்டது. அதில் முகமது ஷமி மிகவும் உணர்ச்சி போங்க பேசியுள்ளார்.
அதில்,”நான் தற்போது இருக்கும் நிலைக்கு என்னுடைய தந்தை தான் காரணம். ஏனென்றால் நான் எந்தவித வசதியும் இல்லாத கிராமத்திலிருந்து வருகிறேன். என்னுடைய கிராமத்தில் இப்போதும் கூட பெரிதாக வசதிகள் இல்லை. என்னுடைய கிரிக்கெட் பயிற்சிக்காக என் தந்தை தினமும் 30 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து கூட்டிச்செல்வார். அந்த இக்கட்டான நிலை தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
அந்த நாட்களை நான் எப்போதும் நினைத்து பார்பேன். அந்த சமயங்களில் என்னுடைய ஒரே ஆசை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதற்காக நான் கடினமாக உழைத்தேன். நான் தொலைக்காட்சியில் பார்த்த வீரர்களுடன் ஒருநாள் விளையாட வேண்டும் என்று கடினமாக உழைத்தேன். எப்போதும் கடின உழைப்பிற்கு நல்ல பயன் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அந்த உழைப்பு தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது” என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். முன்னதாக நேற்று 5 விக்கெட் எடுத்ததன் மூலம் 200 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் இடம்பிடித்து அசத்தினார்.
மேலும் படிக்க: 'எள்ளு வய பூக்கலையே செஞ்சுரி போட்டும் பாக்கலையே” : விராட் கோலியும் சர்வதேச சதமும் !