ஆஸ்திரேலிய டி20 தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரரான டெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமல் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் தீபக் சாஹர் அசத்தலாக பந்துவீசினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். முதலில் இவர் குயிண்டன் டி காக் விக்கெட்டை எடுத்தார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலே ரோசாவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரை வீசிய தீபக் சாஹர் ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்தார். இதன்காரணமாக 2.3 ஒவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. 


 






அடுத்து ஒரளவு சிறப்பாக விளையாடி வந்த எய்டன் மார்க்கரம் 25 ரன்கள் எடுத்தார். அவர் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பார்னல் மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் ஒரளவு தாக்கு பிடித்து ஆடினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 15 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்க எடுத்திருந்தது.


தாக்குப்பிடித்து ஆடி வந்த பார்னல் 24 ரன்கள் எடுத்திருந்த போது அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேசவ் மகாராஜ் சில பவுண்டரிகள் அடிக்க தொடங்கினார். இறுதியில் ஆட்டத்தின் 20 வது ஓவரில் கேசவ் மகாராஜ் 41 ரன்கள் எடுத்து ஹர்ஷல் பந்தில் அவுட்டாகினார். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. 


இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் நான்கு வீரர்கள் டக் அவுட்டாகினர். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸ் இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவின் 4 வீரர்கள் டக் அவுட்டாகி உள்ளனர். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் 4 வீரர்கள் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இன்றைய போட்டியில் பவுமா, ரிலே ரோசோவ், டேவிட் மில்லார், ஸ்டப்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகினர்.




மேலும் படிக்க:9 ரன்னுக்கு 5 விக்கெட்... தென்.ஆப்பிரிக்காவிற்கு சோதனை... இந்தியாவிற்கு சாதனை...