ஆஸ்திரேலிய டி20 தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்கு பயிற்சியின் போது லேசான முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக இன்றைய போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் தீபக் சாஹர் இடம்பெற்றுள்ளார். 

 

அதேபோல் ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கண்டிசனிங் செய்ய சென்றுள்ளனர். இதன்காரணமாக அவர்களும் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தொடரை இழக்காத தென்னாப்பிரிக்கா: 

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது வரை 3 டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-தென்னாப்பிரிக்கா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா 2-2 என வெற்றி பெற்று இருந்தன. அப்போது 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்தத் தொடரும் 2-2 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததே இல்லை. அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு முறை கூட கைப்பற்றாத சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த முறையாவது அந்த கனவை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா:

அணி வெற்றி தோல்வி முடிவில்லை
இந்தியா 11 8 3
தென்னாப்பிரிக்கா 8 11 3

இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 362 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.