ஆஸ்திரேலிய டி20 தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரரான டெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமல் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் தீபக் சாஹர் அசத்தலாக பந்துவீசினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். முதலில் இவர் குயிண்டன் டி காக் விக்கெட்டை எடுத்தார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலே ரோசாவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 


 






மூன்றாவது ஓவரை வீசிய தீபக் சாஹர் ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்தார். இதன்காரணமாக 2.3 ஒவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. அத்துடன் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 5 விக்கெட்டிற்கு குறைவான ஸ்கோரை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்தது.


டி20 யில் இந்தியாவிற்கு எதிராக முதல் 5 விக்கெட்டிற்கு குறைவாக ஸ்கோர் எடுத்த அணிகள்:


9/5 தென்னாப்பிரிக்கா திருவனந்தபுரம் 2022
20/5 ஆஃபகானிஸ்தான் துபாய் 2022
21/5 இலங்கை விசாகப்பட்டினம் 2016


கடைசியாக இந்தியா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி முதல் 5 விக்கெட் இழக்கும் போது 20 ரன்கள் எடுத்திருந்தது. அதுவே இந்தியாவின் சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.


டி20யில் முதல் 5 விக்கெட்டிற்கு தென்னாப்பிரிக்காவின் குறைவான ஸ்கோர்:


9/5 vs இந்தியா திருவனந்தபுரம் 2022 
10/5 vs வெஸ்ட் இண்டீஸ் போர்ட் எலிசபெத் 2007
31/5 vs இந்தியா ட்ரபன் 2007


அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 5 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்கா அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணி 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 5 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது அதைவிட குறைவாக முதல் 5 விக்கெட்டிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக இதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி குறைவாக முதல் 5 விக்கெட்டிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. தற்போதை அதைவிட குறைவான ஸ்கோரை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.