ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் ஹூடா தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகினார். தனது காயத்தில் இருந்து குணமடந்த பிறகு தீபக் ஹூடா தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்நிலை தகுதி குறித்து நிரூபிக்க வேண்டும்.
அதேபோல், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்நிலை தகுதி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முகமது ஷமி முழுமையாக குணமடையவில்லை. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பங்கேற்க முடியாது. இதன் காரணமாக தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவையும், ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரையும் நியமித்துள்ளது. டி20 அணியில் ஷாபாஸ் அகமதுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா:
அணி | வெற்றி | தோல்வி | முடிவில்லை |
இந்தியா | 11 | 8 | 3 |
தென்னாப்பிரிக்கா | 8 | 11 | 3 |
- இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 362 ரன்கள் குவித்துள்ளார்.
- பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் தற்போது வரை 22 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அவற்றில் இந்தியா 11 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.