கிரிக்கெட் போட்டிகள் என்றாலே போட்டியை காண ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியை காண குவிவது வழக்கம். கிரிக்கெட் ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆற்றல் கொண்டது இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆகும்.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதல், அகமதாபாத்தில் உள்ள சாதாரண ஹோட்டல்கள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அறைகள் நிரம்பத் தொடங்கி விட்டது.


இதனால், வழக்கமாக இருக்கும் வாடகைத் தொகையை காட்டிலும் பல மடங்கு ஹோட்டல் அறை கட்டணம் உயர்ந்துள்ளது. அகமதாபாத் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அறைகளின் கட்டணம் அந்த ஒருநாள் மட்டும் நிர்ணயித்துள்ளன. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் எங்கு தங்குவது என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


நிரம்பும் மருத்துவமனை அறைகள்:


இந்த நிலையில், கிரிக்கெட் போட்டியை பார்த்தே தீர வேண்டும் என்று ஆர்வம் நிரந்த ரசிகர்கள் புது யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். அதாவது, போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் அருகே உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கான அறைகளை புக் செய்து வருகின்றனர்.


அதாவது, அந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்வதாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை அறைகளை தங்கள் பெயரில் பதிவு செய்து வருகின்றனர். இதன்படி, அந்த அறைகளில் நோயாளியும் அவருடன் ஒரு நபரும் தங்கலாம். இதற்காக, அவர்களுக்கு அந்த ஒருநாளுக்கு 3 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது.


ரசிகர்களின் இந்த புது வியூகத்தால் அகமதாபாத் மைதானத்தின் அருகில் உள்ள மருத்துவமனைகள் அக்டோபர் 15-ந் தேதிக்கும், அதற்கு முந்தைய அல்லது பிந்தைய நாளிலும் நோயாளிகள் என்ற போர்வையால் உள்ள ரசிகர்களின் பெயரால் இப்போதே நிரம்பி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி இந்தியாவிலே மிகப்பெரிய மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Yashasvi Jaiswal on Kohli: "விராட் கோலி ஒரு லெஜண்ட்.. அவருடன் ஆடியதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.." மனம் திறந்த ஜெய்ஸ்வால்..!


மேலும் படிக்க: Watch Video: எங்க அம்மா உங்க ஃபேன், சீக்கிரம் சதம் போடுங்க.. கோலியிடம் கோரிக்கை வைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!