இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்து வெளியேறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 


வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட அட்டவணையிடப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. 






அதன்படி கேப்டன் ரோகித் சர்மவும் இளம் வீரட் ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தனர். இருவரில் ரோகித் சர்மா நிதானமாக ஆட, ஜெய்ஸ்வால் அதிரடி காட்டினார். ஒருகட்டத்தில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 80 ரன்களில் நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா, இடது கை பந்து வீச்சாளரான வாரிகன் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். நன்றாக தூக்கி வீசப்பட்ட இந்த பந்தை தடுக்க முயற்சி செய்த ரோகித் சர்மாவின் கணிப்பில் இருந்து விலகிச் சென்ற பந்து நேராக ஆஃப் -சைடு ஸ்டெம்பை தாக்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரோகித் சர்மா சிறிது நேரம் ஏமாற்றத்துடன் கிரீஸில் நின்றுகொண்டு இருந்தார். அதன் பின்னர் மிகவும் ஏமாற்றத்துடன் ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய ரோகித் சர்மா தனது பேட்டை தரையில் வேகமாக அடிப்பது போன்று வேகமாக வீசினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது. 


கோலி அபாரம்:


அவரை தொடர்ந்து ராகானேவும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 182 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. இதையடுத்து, 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ஜடேஜா பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி அரைசதம் கடந்து அசத்தினார். இதனால், இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை சேர்த்துள்ளது. கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச், கேப்ரியல், வாரிகன் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.