ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணியின் அபாரமான பவுலிங்கில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இதனால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது,
ரோகித், சுப்மன்கில்லில் அதிரடி அரைசதத்திற்கு பிறகு மழையால் ஆட்டம் ரத்தான பிறகு, 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அபார சதத்தால் 356 ரன்களை குவித்தது. இதையடுத்து, பிரம்மாண்ட இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பும்ரா பந்தில் அவுட்டாக, கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் போல்டாக முகமது ரிஸ்வானும் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடக்கம் முதல் நிதானம் காட்டிய பக்கர் ஜமான் 27 ரன்களில் அவுட்டாக, குல்தீப் யாதவ் பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்தார்.
அவரது சுழலில், பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயன்ற சல்மான் 23 ரன்களிலும் அதிரடி அபாயகரமான பேட்ஸ்மேன் இப்திகார் அகமது 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த பாகிஸ்தான் வீரர்கள் சீட்டுக்கட்டு போல ஒற்றை ரன்னில் அவுட்டாக 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காயம் காரணமாக நசீம்ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் களமிறங்காததால் பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டானதாகவே கணக்கிடப்பட்டது.
இதையடுத்து, இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியில் இதுவும் ஒன்றாகும். இந்த வெற்றி மூலம் இனி வரும் வங்கதேசம், இலங்கை ஆகிய ஏதாவது ஒரு போட்டியில் வென்றாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு எளிதில் செல்ல முடியும்.
நேபாளத்திற்கு எதிராக சொதப்பலாக பந்துவீசினாலும், இன்றைய போட்டியில் இந்திய அணி மிரட்டலாக பவுலிங் வீசினார்கள் என்பதே உண்மை ஆகும். அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா, பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய விராட்கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111 ரன்களும் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு முடிவு கிடைக்காத நிலையில், சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இந்திய அணி நாளை இலங்கையுடன் இதே மைதானத்தில் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs PAK: ருத்ரதாண்டவம் ஆடிய இந்தியா.. கோலி, ராகுல் அபார சதம்.. 357 ரன்கள் பாகிஸ்தானுக்கு டார்கெட்..!
மேலும் படிக்க: Watch Video: 'யாருமே செய்யாத ஒன்னு..' ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரிலே சிக்ஸர்.. அரிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா..!