ரோஹித் சர்மா தனது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் இன்னிங்ஸின் முதல் ஓவரில் ஷாஹீன் அப்ரிடியின் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தனது ஸ்கோரை தொடங்கினார்.
முதல் ஓவரிலே சிக்ஸ்:
இதன்மூலம், ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரில் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்தார். இதுதான் ரோஹித் சர்மாவின் சிறப்பு. இதற்கு முன்னதாக இந்த சாதனையை எந்தவொரு வீரரும் படைத்ததில்லை.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் மொத்தமாக 78 ரன்கள் எடுத்திருந்தால் ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பார்.
ரோஹித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை:
கடந்த 2008ம் ஆண்டு ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், அடுத்த 6 ஆண்டுகள் இவரது நிலைமை இந்திய அணியில் உள்ளேயும், வெளியேயுமாய் இருந்தது. 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவுக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதற்குப் பிறகு, ரோஹித் சர்மாவின் உச்சம் அபரிமிதமானது.
ரோஹித் சர்மா இதுவரை 246 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48.88 என்ற சிறந்த சராசரியுடன் 9922 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 90.09 ஆக உள்ளது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களும், 50 அரைசதங்களும் அடித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாதான். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோராக 264 ரன்கள் ஆகும்.
தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா:
தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் 158 இன்னிங்ஸ்களில் 56 சராசரியுடன் 7892 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 28 சதங்கள், 36 அரை சதங்கள் தொடக்கவீரராக வந்தது.
நேபாள அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கான அறிகுறிகளை காட்டினார். அதன் தொடர்ச்சியாக, இந்த போட்டியில் சிறப்பாக அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
விளையாடும் XI -
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்.