ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா  - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதிய போட்டி இன்று ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது. 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு விராட்கோலி – கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலான பேட்டிங்கை அளித்தது.


நிதானம் டூ அதிரடி:


25 ஓவர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடங்கிய நிலையில், அவுட்ஃபீல்டில் பந்து செல்ல சற்று சிரமமாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் நிதானமாகவும், ஏதுவான பந்துகளையும் அடித்து ஆடினார்.





அவருக்கு மறுமுனையில் விராட்கோலி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ரன் சீரான வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட்கோலியும் அரைசதம் விளாசினார்.


கோலி - கே.எல்.ராகுல் சதம்:


அரைசதத்திற்கு பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் எகிறத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 300 ரன்களை கடந்த பிறகு இந்தியாவின் ரன் வேகம் இன்னும் அதிகரித்தது. கே.எல்.ராகுல் – விராட்கோலி ஜோடி மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தது.


நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்குள் வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.47வது ஓவரின் கடைசி பந்தில் அவர் சதம் விளாசினார். மறுமுனையில் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டிய அடுத்த பந்திலே ஒரு ரன் எடுத்து விராட்கோலி சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் விராட்கோலிக்கு இது 47வது சதம் ஆகும்.


356 ரன்கள் டார்கெட்:


சதங்களை கடந்த பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் மளமளவென எகிறியது. கடைசி ஓவரில் பஹீம் நோ பால் வீச அடுத்தடுத்து பவுண்டரியை விராட்கோலி விளாசியதால் இந்தியா 350 ரன்களை கடந்தது.  கடைசி பந்தையும் விராட்கோலி சிக்ஸருக்கு விளாசினார். இதனால், இந்திய அணி 356 ரன்களை விளாசியது. விராட்கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.




பாகிஸ்தான் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் கே.எல்.ராகுல் – விராட்கோலி ஜோடி வெளுத்து வாங்கியது. ஷாகின் அப்ரிடி 10 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 79 ரன்களை வாரி வழங்கினார். பகீம் 74 ரன்களையும், ஷதாப்கான் 71 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். 


விராட்கோலிக்கு ராசியான மைதானம்:


இந்த போட்டி மூலம் பாகிஸ்தான் அணியின் வேகத்திற்கு எதிராக இந்தியா தடுமாறி வருகிறது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்திய அணியின் டாப் 2 வீரர்களும் அரைசதம் விளாசியதுடன், அடுத்த 2 வீரர்களும் சதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மைதானத்தில் விராட்கோலி கடைசியாக ஆடிய 4 ஒருநாள் போடடிகளிலும்(இந்த போட்டி உள்பட) சதம் விளாசியுள்ளார். 


பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராஃப் காயம் காரணமாக பந்துவீசாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.