ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது, மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.


ஆசியக்கோப்பை தொடர்:


6 நாடுகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று மீண்டும் மோத உள்ளன.


இந்தியா - பாகிஸ்தான் போட்டி:


கொழும்புவில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியாவது முழுமையாக நடைபெறுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பா?


கொழும்புவின் பிரேமதாசா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டால் அதிக ரன்களை குவிக்க முடியும். இறுதிக்கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சுக்கும் மைதானம் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே கொழும்பில் இன்றும் மழை பெய்யலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இன்றைய போட்டியின் போது 70 முதல் 90 சதவிகிதம் வரை மழை வர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மழை நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரு நாள் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை காரணமாக ஒருவேளை இன்றைய போட்டி பாதிக்கப்பட்டாலும், நாளை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Ind Vs Pak: ஆசியக்கோப்பை.. ”சூப்பர் 4-ல் இந்தியாவை வீழ்த்துவோம்” சாதகத்தை அடித்துச் சொல்லும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்


சவால்களை தகர்க்குமா இந்தியா ? 


லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கோலி மற்றும் ரோகித் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இந்த இருவரின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கடந்த போட்டியில் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட, நடுகள வீரர்களான இஷான் கிஷன் மற்றும் பாண்ட்யா நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய போட்டியில் கே.எல். ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்ப்படுகிறது. பந்துவீச்சை பொருத்தமட்டில் பும்ரா, சிராஜ், தாக்கூர் ஆகியோருடன் ஆல்ரவுண்டர் பாண்ட்யா ஆகியோரையே இந்திய அணி மலைபோல நம்பியுள்ளது. சுழற்பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் குல்தீப் வலுசேர்க்கின்றனர். நடப்பு தொடரில் இதுவரை நேபாள அணிக்கு எதிராக மட்டுமே இந்திய அணி பந்துவீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா உத்தேச அணி:


ரோஹித் சர்மா, சுப்மான் கில், இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


பாகிஸ்தான் உத்தேச அணி:


ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் , முகமது ரிஸ்வான்(, ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்